செய்திகள்

கமுதியில் கணவரை வெட்டிக் கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பெரு நாழி அருகே உள்ள கொண்டுநல்லான்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 45) விவசாயி.

இவருக்கு சண்முகத்தாய் (43) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சின்னத்துரை, வீட்டு செலவுக்கு சரியாக பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. குடி போதையில் இருந்த சின்னத்துரை அரிவாளை எடுத்து வெட்டப்போவதாக மனைவியை மிரட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகத்தாய் கணவரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி சண்முகத்தாயை கைது செய்தனர். #tamilnews