மும்பை:
மும்பையில் கடந்த 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது.
ஏற்கெனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தத், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தண்டனை முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக புனேவை சேர்ந்த பிரதீப் பலேகர் என்பவர் மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு முன் கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது? என்று மாநில(மகாராஷ்டிரா) அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டி.ஐ.ஜி., சிறை கைதிகள் ஆலோசனை செய்தார்களா? அல்லது சிறை கண்காணிப்பாளர் தனது பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பினாரா என்று நீதிபதி சவந்த் கேள்வி எழுப்பினார்.