புதுடெல்லி:
நாகாலிம் என்ற பெயரில் தனிநாடு கேட்டு நாகாலாந்து கிளர்ச்சி அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் முய்வா) கடந்த 50 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிளர்ச்சிக் குழுவினருடன் மத்திய அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.
பிரதமர் தலைமையில் கடந்த 3-8-2015 நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(ஐசக் முய்வா) பிரதிநிதி முய்வே அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அன்று பேசுகையில், "நாகாலாந்தில் அரசியல் ரீதியிலான சண்டை காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர். நாகலாந்து பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டது. எனவே, 60 ஆண்டுகளாக இருந்த நாகா அரசியல் பிரச்சனைக்கு உடன்படிக்கை மூலம் தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அமைதி முயற்சிக்கு நாகாலாந்து மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்" என்று கூறினார்.
இந்நிலையில், வரும் 27-ம் தேதி நாகலாந்து சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், கடந்த 2015 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நாகா அமைதி உடன்படிக்கை என்ன ஆனது? என்ற கேள்வியை எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சொல்லுக்கு பொருள் தெரியாத முதல் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாகா அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் வரலாறு படைத்ததாக மோடி கூறி வந்தார். ஆனால், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தும் அந்த ஒப்பந்தம் என்ன ஆனது? எங்கே போனது? என்று தெரியவில்லை. தனது சொல்லுக்கு பொருள் தெரியாத இந்தியாவின் முதல் பிரதமர் மோடிதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.