செய்திகள்

பிடித்த அரசியல் தலைவர் யார்? - மோடிக்கு 47 சதவீதம் பேர் ஆதரவு

பிடித்த அரசியல் தலைவராக மோடிக்கு 47 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 சதவீதம் வாக்குகள் குறைந்து விட்டது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாலை மலர்

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அரசியல் தலைவர், சிறந்த இந்தி நடிகர், சிறந்த ரோல்மாடல், செக்சியான நடிகை என பல தலைப்புகளில் சர்வே நடத்தி வருகிறது.

2017-ம் ஆண்டுக்கான சர்வே சமீபத்தில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

சிறந்த, பிடித்த அரசியல் தலைவர் யார் என்ற கேள்விக்கு 47.5 சதவீதம் பேர் பிரதமர் மோடியை தேர்ந்து எடுத்துள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக 8.9 சதவீதம் பேர் ராகுல் காந்தியையும் 8.7 சதவீதம் பேர் சோனியா காந்தியையும் 7 சதவீதம் பேர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டும் சிறந்த அரசியல் தலைவராக மோடியே தேர்வாகி இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு 51.7 சதவீதம் வாக்குகள் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு மோடிக்கு 4 சதவீதம் வாக்குகள் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு 2.7 சதவீதம் பேர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த ராகுல் இந்த ஆண்டு கூடுதலாக 6 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளார்.

பிடித்த இந்தி நடிகர்களில் 18.3 சதவீதம் பேர் ஆதரவுடன் நடிகர் சல்மான்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷாருக்கான்-15.3, அக்சய் குமார்-13.3, அமிதாப்பச்சன்-13.2 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கான் இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சிறந்த ரோல் மாடலாக மோடியை 34.6 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். பில்கேட்சை 25 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் கோலியை நிறைய பேர் ரோல் மாடலாக கூறியிருந்தனர்.

மிகவும் கவர்ச்சியான பெண் யார் என்ற சர்வேயில் 33 சதவீதம் வாக்குகள் பெற்று தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ராவுக்கு 2-வது இடம் (22.9) கிடைத்துள்ளது.

செக்சியான ஆண்களில் ரன்பீர் கபூருக்கு (32.7) முதலிடமும் ரன்வீர்சிங்குக்கு (21.6) 2-வது இடமும் கிடைத்துள்ளது. விளையாட்டு வீரர்களில் வீராட் கோலி 29.7 சதவீதம் வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.