கவுண்டம்பாளையம்:
கோவை அவினாசி ரோட்டில் ஹோப் காலேஜ் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டு இயங்கி வருகிறது. இங்கு ஏற்கனவே 30 ஆட்டோக்கள் உள்ளன.
இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நடராஜ் என்பவர் புதிதாக ஆட்டோ வாங்கி ஸ்டாண்டில் நிறுத்த வந்தார். அப்போது அங்கு நின்ற அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் இந்த பிரச்சினை குறித்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் சிலர், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கவுண்டம்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விடம் முறையிட்டனர்.
இதனால் ஆட்டோ டிரைவர் நடராஜை , ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. போனில் பேசினார்.
அப்போது செல்போனில் பேசிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மிகவும் காட்டமாக பேசியதாக கூறி நடராஜ், வாட்ஸ்அப்பில் எம்.எல்.ஏ.வின் பேச்சை பரவ விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வாட்ஸ்அப்பில் வெளியானது எனது பேச்சு தான், வீண் பிரச்சினை செய்யும் நபரிடம் நான் கெஞ்சி கொண்டு பேச முடியாது. சில நேரத்தில் இதுபோல் பேசினால் தான் புரியும்.
அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில் நான் பேசியதையும், ஆட்டோ டிரைவர் நடராஜ் பேசியதையும் முழுமையாக வெளியிட்டால் தான் எல்லோருக்கும் உண்மை தெரியவரும். நான் பேசுவதை மட்டும் பரவ செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.