வேலூர்:
பனப்பாக்கம் அருகே பிளஸ்-1 மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே வகுப்பில் படிந்து வந்த 4 மாணவிகளும் நெருங்கிய தோழிகள். வகுப்பறையில் ஒரே வரிசையில் அமர்ந்திருப்பார்கள்.
எப்போதும் ஜாலியாக இருப்பார்கள். இந்நிலையில் ஓரீரு நாட்களுக்கு முன்பு தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளும் தங்கள் வரிசையில் இருந்த மேலும் 2 மாணவிகளுடன் சேர்ந்து பாடத்தை கவனிக்காமல், கானா பாட்டு எழுதியுள்ளனர்.
இந்த கானா பாட்டை, தமிழ் ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களை கதாபாத்திரமாக கொண்டு எழுதியதாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த தமிழ் ஆசிரியர் மாணவிகள் பற்றி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியை, 6 மாணவிகளையும் அழைத்து கண்டித்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு வரும் போது, பெற்றோரை அழைத்து வர வேண்டும்.
பெற்றோருடன் வரவில்லையெனில் வகுப்பறைக்குள் செல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளை தவிர, மற்ற 2 மாணவிகளும் பெற்றோரை அழைத்து வந்து தலைமை ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த 4 மாணவிகள் பெற்றோரை அழைத்து வரவில்லை, மன்னிப்பும் கூட கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை வகுப்பறைக்குள் 4 மாணவிகளையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த 4 மாணவிகளும், பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பிறகு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அவலூர் போலீசார் 4 மாணவிகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக (174) சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.