செய்திகள்

மேற்கு மாம்பலம் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

மேற்கு மாம்பலம் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

விழுப்புரம் மாவட்டம் கந்தஜிபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

அப்போது சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த மீனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வெவ்வேறு ஜாதி என்பதால் சந்தோஷ்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி சந்தோஷ்குமார் மீனாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். எனினும் இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

நேற்று காலை மீனா புட்லூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். வீட்டில் சந்தோஷ்குமார் மட்டும் இருந்தார். இரவில் மீனா திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது கணவர் சந்தோஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அசோக்நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

சந்தோஷ்குமாரின் காதல் பற்றி அறிந்ததும் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய சில நாட் களுக்கு முன்பு அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

இதனை அறிந்த மீனா காதலன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுபற்றி திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 2-ந் தேதி சந்தோஷ்குமார் மீனாவை திருமணம் செய்து இருக்கிறார். கலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தோஷ்குமாரின் பெற்றோர் தங்களது சொத்தில் பங்கு கிடையாது என்று கூறி உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக சந்தோஷ்குமாரிடம் எழுதி வாங்கி இருக்கிறார்கள். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.