கிங்ஸ்டன்:
இங்கிலாந்து செல்லும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச்சிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 18 மாதங்ளாக எந்தவித டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவருக்கு மிண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அவரது தேர்வு குறித்து பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தேர்வாளர் குழு தலைவர் கர்ட்னி பிரௌன் ”கேமார் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், அவரது வேகம் அதிகமாக இல்லாவிட்டாலும், நிலைமைக்கேற்ப சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர். அவர் சேர்க்கப்பட்டிருப்பது அணிக்கு கூடுதல் பலம் அளித்துள்ளது” என்றார்.
இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோச் 122 விக்கெட்களை சாய்த்துள்ளார். இந்த அணியில் தேர்வாளர் குழு தலைவர் கர்ட்னி பிரௌனை ’முட்டாள்’ என விமர்சித்த அதிரடி ஆட்டக்காரர் டெரன் பிராவோ சேர்க்கப்படவில்லை. அவர் அடுத்த தொடர்களில் தேர்ந்தெடுக்கப்படலாம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் முழு விவரம்:
ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கிரேக் பிரத்வெய்ட், தேவேந்திர பிஷு, ஜெர்மெய்ன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், மிக்கெல் கம்மின்ஸ், ஷேன் டௌரிச், ஷனான் கெப்ரியல், சிம்ரோன் ஹெர்மைர், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், ரெய்மான் ரிஃப்பர், கெமார் ரோச்.