பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மோடியின் வலிமையை குறைக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் முக்கிய தலைவர்களுக்கு சோனியாகாந்தி சமீபத்தில் விருந்து கொடுத்தார்.
சோனியாவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் மார்ச் 27-ந் தேதி (இன்று) டெல்லியில் உள்ள அவரது வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிப்பதாக முன்னர் தகவல் வெளியானது. ஆனால், அப்படி ஏதும் விருந்தளிக்கும் திட்டம் தேசியவாத காங்கிரசுக்கு இல்லை என்று அக்கட்சியினர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று டெல்லி வந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, இன்று பாராளுமன்ற வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.
ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பாரதி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அரசியல் தலைவர்கள் சந்தித்தால் அரசியலை தவிர வேறு என்ன பேசுவார்கள்? என எதிர் கேள்வி எழுப்பினார். நாளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். #tamilnews