செய்திகள்

கருணாநிதிக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் பாராட்டு - தமிழகத்தில் துளிர்விடும் அரசியல் நாகரீகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி உடல்நலம் மீது அக்கறை செலுத்தும் அ.தி.மு.க. அமைச்சர்கள், ‘‘தமிழுக்காக பாடுபட்டவர்’’ என புகழாரம் சூட்டியிருப்பது அரசியல் வரலாற்றில் வரவேற்பை பெற்றுள்ளது. #Karunanidhi

மாலை மலர்

உடல்நல குறைவு காரணமாக காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வமும் அமைச்சர்களும், கருணாநிதியின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் விரைவில் மீண்டும் தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் மரணம் அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கையில் இப்போது பெரிய அளவில் வரவேற்கத்தக்க வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் வேறுபாடுகளை மறந்து, நலம் விசாரிப்பது வட மாநிலங்களில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற நிலை காணப்படுவதில்லை. இப்போதுதான் அதனை பார்க்க முடிகிறது.

கருணாநிதி பூரண நலம் பெறவேண்டும் என்றும், அவருக்காக வேண்டிக் கொள்வதாகவும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் தமிழகத்திலும் அரசியல் நாகரீகம் துளிர் விட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கருணாநிதியை பெரியவர் என்று குறிப்பிட்டார். கருணாநிதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் விரைவில் பூரண குணம் அடையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில், திருவாரூரில் இருந்து சென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். அரசியலில் அவரது பயணம் நீண்ட பயணமாகும். மூத்த அரசியல்வாதியான அவர் நலம் பெற வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, கருணாநிதி நலம் பெற மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள கருணாநிதி நீடூழி வாழ வேண்டும். அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என்றும் தெரிவித்தார்.