செய்திகள்

நாட்டில் நடைபெறும் அட்டூழியங்களை எதிர்க்கவே மீரா குமாருக்கு வாக்களித்தோம்: மம்தா பானர்ஜி

நாட்டில் தற்போது நடைபெறும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு வாக்களித்தோம் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

பாராளுமன்ற குளிர்காலத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த கூட்டத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் செயலாற்ற வேண்டிய முறை பற்றி அறிவுரைகளை வழங்குவதற்காக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ‘நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எழுந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தவறிய மோடியின் அரசை எதிர்த்தும், கண்டித்தும் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புமாறு எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு தெரிவித்துள்ளேன்’ என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக போராடுவோம். சிறைக்கு சென்றாலும் செல்வோமே தவிர யாருக்கும் நாங்கள் தலை வணங்க மாட்டோம். இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதற்கு இதுதான் உகந்த நேரமாகும். இதுதொடர்பாக, மற்ற கட்சிகளுடன் பேசியுள்ளோம்.

பா.ஜ.க. தலைமையிலான இந்த அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பூட்டான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் இருந்த நட்புறவு நாசமாகியுள்ளது. வங்காளதேசம் நாட்டு எல்லைப்பகுதி வழியாக அங்கிருக்கும் தீவிரவாதிகள் தாராளமாக நமது நாட்டு எல்லைக்குள் நுழைகிறார்கள். இதை தடுப்பதற்கு மத்திய புலனாய்வு முகமைகள் எதுவும் செய்வதில்லை.இதனால், அதிகம் பாதிக்கப்படுவது (மேற்கு வங்காளம் மக்கள்) நாங்கள்தான்.