செய்திகள்

அடுத்த கட்ட முடிவு எடுக்கும் வரை புதுவையை விட்டு செல்ல மாட்டோம்: தங்க.தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

புதுவையில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.எ. தங்க. தமிழ்செல்வன்,அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் வரை புதுவையை விட்டு செல்ல மாட்டோம் என்று கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சின்ன வீராம்பட்டினம் வின்ட் பிளவர் ஓட்டலில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று மதியம் அங்கிருந்து காலி செய்து புதுவை நகருக்குள் உள்ள சன்வே ஓட்டலுக்கு வந்தனர்.

சின்ன வீராம்பட்டினம் ஓட்டலில் இருந்து புறப்பட்ட போது தங்க.தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் தங்கி இருக்கும் ஓட்டலில் ஏற்கனவே ஆன்-லைன் மூலம் இன்றைய தேதியில் இருந்து அறைகளை பதிவு செய்துள்ளார்கள். எனவே, நாங்கள் தங்குவதற்கு அறைகள் இல்லை. இதன் காரணமாக வேறு ஓட்ட லுக்கு செல்கிறோம்.

புதுவையில் நாங்கள் எத்தனை நாட்கள் தங்குவோம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வரை அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் வரை புதுவையை விட்டு செல்ல மாட்டோம்.

துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டிப்பாக இங்கு வருவார். அவர் எங்களை சந்திக்க உள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓட்டெடுப்பு நடந்த போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் சபாநாயகர் தனபாலை சுற்றி நின்று இடையூறு செய்தார்கள். மேலும் தாக்கினார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்று நாங்கள் அவரை பாதுகாத்தோம்.

ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த 9 பேர் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், இன்று எங்கள் 19 பேர் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எந்த தவறும் செய்யாத அப்பாவிகளான எங்கள் மீது நடவடிக்கையா? நாங்கள் தீண்டத்தகாதவர்களா?

ஜனநாயக நாட்டில் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொல்ல கூடாதா? இதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் எதையும் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.