கோப்பு படம் 
செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிடாததால் கட்டிடத் தொழிலாளியை கொன்றோம் - கைதான வாலிபர் வாக்குமூலம்

நண்பரின் தாயாருடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் கட்டிடத் தொழிலாளியை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 48). வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்தார். ஊரில் அவர் புதிதாக வீடு கட்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

மிளகாய் பொடி வீசி கொலை

கடந்த 27-ந் தேதி இரவு அலெக்சாண்டர், அங்குள்ள புங்கரைகுளம்கரை பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. திடீரென அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி திணறடித்தனர். பின்னர் அலெக்சாண்டரை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். கடைசி யாக அலெக்சாண்டரின் மோட்டார்சைக்கிளில் அவரது நண்பர் ஒருவர் சென்றிருப்பது தெரியவந்தது. முதலில் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் நண்பரை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு அலெக்சாண்டர் மட்டும் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அலெக்சாண்டரின் நண்பரை போலீசார் விடுவித்தனர்.

இந்தநிலையில் அலெக் சாண்டர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அலெக்சாண்டர் கொல்லப் பட்ட நாள் முதல் அவரும், அவரது மகன்கள் 2 பேரும் தலைமறைவாகி இருந்தனர். விசாரணையில் தலைமறைவான அந்த பெண்ணுக்கும், அலெக் சாண்டருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், இந்த பிரச்சினையிலேயே அலெக்சாண்டர் கொல்லப் பட்டதும் தெரியவந்தது.

இந்த கொலையில் அந்த பெண்ணின் மகன் ஜவகர், உறவினரான சகாயநகரைச் சேர்ந்த சுனில் (வயது 23) உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் சுனில் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனது உறவுப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், அலெக்சாண்டருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அதனை கண்டித்தோம். அந்த பெண்ணுடனான கள்ளத் தொடர்பை கைவிடும்படி கூறினோம். ஆனால் அலெக்சாண்டர் அதனை பொருட்படுத்தவில்லை.

அந்த பெண்ணின் மகனான ஜவகரும், எனது நண்பர் ஆவார். அவர் அலெக்சாண்டரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கூறினார். அதன்படி அலெக்சாண்டரை கொல்ல திட்டம் வகுத்தோம். சம்பவத் தன்று அவர் மோட்டார் சைக்கிளில் தனியாக வரும்போது அவரது முகத்தில் மிளகாய்பொடியை வீசினோம். இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே நாங்கள் அரிவாளால் அவரை வெட்டினோம். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பினோம். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பாம்பூரி வாய்க்காலில் வீசினோம்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருந்தார்.

வாய்க்காலில் வீசப்பட்ட அரிவாளை போலீசார் கைப்பற்றினர். கைதான சுனில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

மேலும் அலெக்சாண்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலியின் மகனான ஜவகர், ஜினோ, கிளிட்டஸ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.