உதய்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றார். அங்கு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். அதன்பின்னர் நிறைவேற்றி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.
பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். உயர்மட்டக்குழு அப்பகுதிகளை பார்வையிட்டுள்ளது. நாம் ஒன்றுபட்டு பிரச்சினையை சமாளிப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு முடிக்காத திட்டங்களை தற்போதைய பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது. நல்ல சாலை இருந்தால், பூ வியாபாரி முதல் டீ வியாபாரி வரை அனைவருக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.
நாங்கள் பதவி ஏற்றபோது, ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கி கிடந்தது. முந்தைய ஆட்சி அப்படி செய்திருந்தது.
அந்த நிலைமையில் பலவீனமான யாராவது பதவி ஏற்றிருந்தால், அவர்கள் அச்சுறுத்தப்பட்டு இருப்பார்கள். ஆனால், நாங்கள் அந்த சவாலை ஏற்றோம். தீர்வை கண்டுபிடித்தோம். வளர்ச்சி பாதையில் நடைபோட்டு வருகிறோம்.
துணிச்சலுடன் முடிவு எடுத்து, மன உறுதியுடன் அதை அமல்படுத்தி வருகிறோம். நாங்கள் தொடங்கிய திட்டங்களை நாங்களே முடித்துவிட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் செய்வது வளர்ச்சி பணி, அரசியல் அல்ல. நாங்கள் பணி செய்து நல்ல முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இங்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.