செய்திகள்

தினகரனை விலக்கிய முடிவில் உறுதியாக உள்ளோம்: நிதியமைச்சர் ஜெயக்குமார்

டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை விலக்கி வைத்த முடிவில் உறுதியாக உள்ளோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளோம்.

மாலை மலர்

சென்னை:

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கட்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறினார்.

ஏற்கனவே கட்சியின் நலனுக்காக ஒதுங்கி இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கட்சிப் பணியை தொடர்வேன் என்று கூறியிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டிடிவி தினகரன் இன்று காலை பெங்களூர் புறப்பட்டு சென்றார். பின்னர் மாலை 4 மணியளவில் சசிகலாவை சிறையில் சந்தித்தார். 

இந்த நிலையில், நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் திடீரென ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது. 

பின்னர், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியதாவது:- 

ஜெயலலிதா அரசை சிறப்பாக தொடர்ந்து வழி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதேபோல், வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா ஆட்சியை சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். 5 ஆண்டுகள் ஆட்சியை தொடர வேண்டும் என்பதே முக்கியம். அதில் எந்த குழப்பத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். 

டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை விலக்கி வைத்த முடிவில் உறுதியாக உள்ளோம். தினகரனை கட்சியை சார்ந்த யாரும் சந்திக்க மாட்டார்கள். சசிகலா தரப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.