சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று கொண்டு இருந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை)அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக வெளியில் வந்தனர்.
அப்போது முருகுமாறன், ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்சியின் நலனுக்காக உழைத்து வருகிறோம். தேவை இல்லாமல் வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசக் கூடாது. பொதுச் செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் சொல்லி தர வேண்டியதில்லை.
அ.தி.மு.க.வில் எம்.ஜி. ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி தங்களது வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. பொதுச் செயலாளர் சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினரை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் படத்தை போட்டோ பெயரை சொல்லியோ யாரும் ஓட்டு கேட்கவில்லை. அப்போது அங்கு மாவட்ட செயலாளராக வெற்றிவேல்தான் இருந்தார். அப்போது அவர் என்ன செய்தார்? இப்போது அவர் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பேட்டியின் போது மற்ற எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக நேற்று பேட்டி அளித்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு கட்சி விதிகள் தெரியவில்லை என்று கூறி இருந்தார். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பதாகவும் தொடர்வதாகவும் அவர் பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று வெற்றிவேலுக்கு எதிராக பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.