செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு வராது: அதிகாரி தகவல்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மாலை மலர்

மேட்டூர்:

தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 120 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 19.98 அடி தண்ணீர் உள்ளது.

அணைக்கு 46 கன அடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஒருகாலத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அவர்களை வாழ வைத்துக் கொண்டிருந்த மேட்டூர் அணையின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.

காவிரி நடுவர் மன்ற ஒப்பந்தப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததால் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா பகுதி பாலை வனம் போல் மாறியது.

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீருக்கான தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வந்தது.

தற்போது அணையில் 19.98 அடி தண்ணீர் உள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறி தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழை பெய்யும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளனர்.

தற்போது மேட்டூர் அணையில் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பண்ணவாடி பரிசல்துறை, மூலக்காடு, மேச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கூனாண்டியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள், பட்டா, சிட்டா நகலை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்து அனுமதி பெற்று அந்த அனுமதியை மேட்டூர் உதவி கலெக்டரிடம் கொடுத்து மண் எடுத்து வருகிறார்கள்.

இதேபோல மண்பாண்ட தொழிலாளர்களும் மண் எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை வருகிற 27-ந் தேதி முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு அணை முழுவதும் தூர்வாரப்பட்டு அதிக அளவில் நீரை தேக்க வாய்ப்பு ஏற்படும்.

கடந்த காலங்களில் அணை நிரம்பிய உடன் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்த நிலை இருந்தது. ஆனால் இனிமேல்அதற்கு வாய்ப்பு இருக்காது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்லும் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களும் அந்த வாய்க்கால்கள் செல்லும் வழியில் உள்ள ஏரி, குளங்களும் தூர் வாரப்பட உள்ளதால் இனிமேல் நீர் வீணாக வாய்ப்பு இல்லை.

ஜூன் மாதம் முதல் மழை நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கும். இந்த மழை நீரை நம்பி இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நீர் இருப்பை வைத்து ஒரு மாதத்திற்கு குடிநீர் வழங்க இயலும். அதன்பிறகு மழை பெய்து நீர் வந்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும், பாலாறு, சின்னாறு பகுதிகளிலும் மழை பெய்து அந்த நீர் மேட்டூருக்கு வந்தால் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. அக்னி நட்சத்திர காலமான தற்போதே மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவ மழை கண்டிப்பாக கைகொடுக்கும் என்று நம்புகிறோம்.

குடிநீர் வினியோகம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. கதவணைகளில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்யலாம். மேட்டூர் அணையில் கிணறுகள் அமைத்து அதில் இருந்து நீர் எடுத்து குடிநீருக்கு வினியோகம் செய்யலாம். எனவே குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.