வாணியம்பாடி:
ஆந்திராவில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் மாலை நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள குப்பம், மன்னானூர், பெரும்பள்ளம், சாந்திபுரம் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாலாற்றில் கலந்தது.
குப்பத்திலிருந்து தமிழக எல்லையான புல்லூர் வரை பாலாற்றில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. புல்லூர் தடுப்பணையும் 12 அடி உயர்த்திக்கட்டப்பட்டது. தனது சொந்த தொகுதியில் கட்டப்பட்ட இந்த தடுப்பணைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.
காட்டாறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பியது. மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து தமிழக எல்லையில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையை நிரப்பியது. இதனால் புல்லூர் தடுப்பணையிலிருந்து தமிழக பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் தமிழக பகுதியாக ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி பகுதி வழியாக பாலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் பல மாதங்களாக வறண்டு காணப்பட்ட பாலாற்றில் பல்வேறு இடங்களில் மணல் அள்ளப்பட்டதால் ராட்சத குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் எல்லை பகுதியில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் கொடையாஞ்சியை கடந்தபின்னர் பள்ளங்களில் தேங்கியதோடு நின்றுவிட்டது.
ஆந்திராவில் கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் இந்த ஆண்டு உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் மழை வெள்ளம் இந்த தடுப்பணைகளில் தேங்கியுள்ளது. எஞ்சிய நீர் மட்டும் தமிழக பகுதிக்கு வந்தன.
தற்போது வந்த மழை வெள்ளம் காரணமாக திம்மாம்பேட்டை, மண்ணாங்குப்பம் அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 6 மாதங்களுக்கு நிலத்தடி நீர் மட்டும் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது மழை நின்று விட்டதால் பாலாற்றில் நீர்வரத்து நின்று விட்டது. ஆந்திர தடுப்பணைகள் உயர்த்தபடாமல் இருந்திருந்தால் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்திருக்கும்.
ஆந்திராவில் உள்ள அனைத்து தடுப்பணைகள் நிரம்பி விட்டதால் மழைக் காலத்தில் பாலாற்று வெள்ளம் தமிழகத்துக்கு வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.