செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ சுரங்க பணியால் வீடுகளில் திடீர் விரிசல்: பொதுமக்கள் பீதி- கவலை

சென்னை வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணியால் வீடுகளில் ‘திடீர்’ விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி- கவலை அடைந்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்களின் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கியது.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலும், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேருபூங்கா வரையில் சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.

வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல் வரையில் சுரங்கபாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணியின் போது ஆங்காங்கே திடீரென ரசாயன கலவை சாலைகளில் வெளியேறி பீதி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று காலை வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகே மொட்டை கார்டன் பகுதியில் பல வீடுகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி-கவலை அடைந்தனர். இப்பகுதியில் வசிக்கும் அமீர்பாஷா (வயது 35) என்பவரது வீட்டில் சுவர்கள், மாடி சிமெண்ட் கூரைப்பகுதி தூண்களில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மெட்ரோ தோண்டும் பணியால் எங்கள் வீடுகளில் பல அதிர்வுகள் ஏற்படுகின்றன. விரிசல்களால் மிகுந்த கவலை, பீதி அடைந்துள்ளோம்.

நேற்று காலை ஏற்பட்ட விரிசலால் வீட்டின் கான்கிரீட் கூரை பகுதி, தூண்கள், சுவர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. பைப்லைன் குழாய்கள் உடைந்துள்ளன. 10 இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தோம். விரைவில் சீரமைத்து தருவதாக உறுதி கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதுபற்றி பாத்திமா என்ற பெண் கூறியதாவது:-

சுரங்க மெட்ரோ ரெயில் பணியால் மொட்டை கார்டன் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு எங்கள் வீட்டில் திடீரென விரிசில்கள் ஏற்பட்டன. ‘திடீர்’ அதிர்வுகளால் நாங்கள் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தோம்.

எங்கள் வீடு 3 மாடி கட்டிடம் ஆகும். சுவர், படிக்கட்டுகளில் விரிசல் ஏற்பட்டதால் குழந்தைகள் பயந்து விட்டனர். அன்று முழுவதும் கவலையில் கஷ்டப்பட்டோம். வீட்டின் பூமிக்கடியில் உள்ள தூண்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல இன்னொருவர் வீட்டில் சிறிய அளவில் ரசாயன கலவை வெளியேறியது. இதனால் அவரும் பீதி அடைந்தார். ஒரே நேரத்தில் பலர் வீடுகளில் விரிசல், சேதம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் கவலை, பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை மொட்டை கார்டன் பகுதியில் நேற்று புதன்கிழமை வீடுகளில் ஏற்பட்ட விரிசல்கள், பாதிப்புகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட வீடுகளின் விரிசல்கள் விரைவில் சரி செய்து தரப்படும்.

ரசாயன கலவை பொங்கியது குறித்தும் ஆய்வு செய்து சரி செய்துள்ளோம். சுரங்க பணி தீவிரமாக நடைபெறுவதால் இது போல் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எங்களுக்கு உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக சரி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல் 1-வது வழித்தட சுரங்க பணியால் இதுவரை 200 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.