செய்திகள்

தி.கார்த்திக், பாண்டியா அதிரடியால் வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா 324 ரன்கள் குவிப்பு

தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அதிரடியால் வங்காள தேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 324 ரன்கள் குவித்துள்ளது.

இன்று இந்தியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ருபெல் ஹொசைன் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ரகானே 11 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தினேஷ் கார்த்திக் 94 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேதர் ஜாதவ் 32 ரன்னில் வெளியேற, ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 54 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்காள தேச அணி சார்பில் ருபெல் ஹொசனை் 9 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.