வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

மேலூர் அருகே இன்று சுவர் இடிந்து சிறுவன்-சிறுமி பலி

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்-சிறுமி மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மாலை மலர்

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் ஜீவா (வயது30). இவருக்கும், பிரேம்குமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பாண்டீஸ்வரி (8), முனீஷ் (6), மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2½) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்த ஜீவா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வந்தார். மகாவிஷ்ணு, அஜிஸ்ரீ ஆகியோர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தனர்.

இன்று காலை பாண்டீஸ்வரி, முனீஷ், மகாவிஷ்ணு, அஜிஸ்ரீ ஆகியோர் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர்.

மகாவிஷ்ணுவும், அஜிஸ்ரீயும் அங்குள்ள 10 அடி உயரமுள்ள மண் சுவரின் கீழே அமர்ந்திருந்தனர். திடீரென்று அந்த சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 4 பேரும் கூக்குரலிட்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க முயன்றனர். பாண்டீஸ்வரி, முனீஷ் ஆகியோர் எளிதாக மீட்கப்பட்டனர். மகாவிஷ்ணு, அஜிஸ்ரீ இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததாலும், அவர்கள் மீது சுவரின் கற்கள் விழுந்திருந்ததாலும் உடனே மீட்க முடியவில்லை. ஆனாலும் பொதுமக்கள் சிரமப்பட்டு மீட்டனர்.

வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் உயிரற்ற இருவரின் உடல்களைதான் மீட்க முடிந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடம் வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.