பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலியே பயிரை மேய்வதைப் போன்று, தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரித்து தடுக்க வேண்டிய அமைப்பான காவல்துறையில் மிகப் பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன. காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியிருப்பது இதை உறுதி செய்துள்ளது.
காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கிடாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த வினாக்கள் மிகவும் முக்கியமானவை.
காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோ ரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.
ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரினால் தான் அவற்றுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும்.
இது தான் காலங்காலமாக உள்ள நடைமுறையாகும். ஆனால், வாக்கிடாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
தமிழக அரசு ஒதுக்கிய ரூ.47.56 கோடியில் 10000 வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கிடாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம் ஆகும்.
ஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி-டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.
ரூ.83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது.
காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாங்குவதென்பது தகவல் தொடர்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல... அதைத் தாண்டி மாநிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படாமல் அடிப்படைத் தகுதிகள் கூட இல்லாத நிறுவனத்திற்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருப்பது தான் இதில் ஊழல் நடந் திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரம் ஆகும்.
எனவே, காவல்துறைக்கு வாக்கிடாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.