வாலாஜா:
வாலாஜாவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தவமணி (வயது 30). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தவமணி மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சாத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஏழுமலையுடன் தவமணிக்கு தொடர்பு ஏற்பட்டது. ஏழுமலை தவமணி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த தவமணியின், 13 வயது மகள் மீது ஏழுமலையின் பார்வை விழுந்தது. இதையடுத்து, தவமணி வீட்டில் இல்லாத போது, ஏழுமலை, சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஏழுமலை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாத சிறுமி, வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரில் உள்ள தனது பொரியப்பா ராஜா வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.