கைது 
செய்திகள்

வியாசர்பாடியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

வியாசர்பாடியில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பூர்:

எம்.கே.பி. நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் கையில் பையுடன் சுற்றி திரிவதை கண்டு அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர், அவர்களிடம் சோதனை நடத்தியதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது. இருவரையும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த அப்புன் ராஜ் (வயது 62), செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த உசேன் (38) என்பதும், 10-க்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் வாடகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கொடுங்கையூர் சுகன் தம்மால் நகரை சேர்ந்த முருகன் (43) என்பவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்து கடையில் இருந்த 300 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.