பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.
இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.
இடைத்தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.