செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் - விவேக் ஜெயராமன் அறிக்கை

சட்டப் பல்பலைக்கழகத்தில் முறைகேடாக சேர்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சட்ட நடவடிக்கை எடுப்பதாக விவேக் ஜெயராமன் எச்சரித்துள்ளார். #LawUniversity #VivekJayaraman

மாலை மலர்

சென்னை அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்ட பல்கலைக்கழகத்தில் இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் சரியான சான்றிதழ்களை அளிக்காமல் முறைகேடான வகையில் சேர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் விவேக் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு விவேக் ஜெயராமன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஜெயக்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான், இளநிலைப் படிப்பை ஆஸ்திரேலியாவிலும், மேற்படிப்பை புனேயிலும் படித்தவன். ஐ.டி.சி நிறுவனத்தில் பணியாற்றி எவ்வித சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல், என்னை நம்பியே வளர்ந்தவன்.

சட்டப் படிப்பை மேற்கொள்ள எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், முறையாகவும், நியாயமாகவும் பயிலவே டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில், சேர்ந்தேன்.

என் உடன் பிறந்த சகோதரி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக, வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்து, அதன் பின்னரே கல்லூரியில் சேர்ந்தேன். இப்போதும் அது சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க, தான் தயாராக இருக்கிறேன். உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியிருந்தால் அப்போதே தனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.

சட்டப்படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாத நிலையில், சட்டப்படிப்பில் இருந்து விலகி விட்டடேன். உண்மை நிலை இப்படி இருக்க, தான் முறைகேடாக ‘சீட்’ வாங்கியதாக சிலர் வேண்டுமென்றே, வி‌ஷமத்தனமான தகவல்களை, உண்மைக்கு மாறான அவதூறுகளை உள் நோக்கத்தோடு பரப்புவது, கொஞ்சமும் நியாயமற்றது, அடிப்படை உண்மைக்கு மாறானது.

மூத்த அமைச்சரான ஜெயக்குமார், இது குறித்த ஆதாரங்களையோ, அடிப்படை உண்மைகளையோ கொஞ்சமும் விசாரிக்காமல் கடுமையான வார்த்தைகளால், தன்னையும், தன் குடும்பத்தினரையும் நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருக்கிறார். தன்னை கைது செய்யப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

என்மீது தவறு இருந்தால், அமைச்சர் ஜெயக்குமார், என்னை தாராளமாக கைது செய்யட்டும். எத்தகைய நடவடிக்கையையும் சட்டப் பூர்வமாக சந்திக்க, தான் தயாராக இருக்கிறேன்.

ஆட்சியும், அதிகாரமும் இருப்பதால், யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என நினைக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இது போன்ற மிரட்டல்களுக்கு ஒரு போதும் பயப்படுகிற நபர், நான் அல்ல. எத்தகைய மிரட்டல்களையும் சட்டப்பூர்வமாக சந்திக்க, தான் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில், ஒரு பிரச்சினையின் உண்மைத்தன்மையை அறியாமல், தான் வகிக்கின்ற பொறுப்பை மறந்து, தான் தோன்றித்தனமாக அவர் பேசுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மறைந்த முதலமைச்சர் அம்மா கற்றுக் கொடுத்த கண்ணியத்தை பின்பற்றுபவராக ஜெயக்குமார் நடந்து கொள்வதுதான் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு சிறப்பாகும். இந்த விவகாரத்தில், தன் மீது குற்றம் சுமத்த எள்ளளவு ஆதாரமும் இல்லாத நிலையில், தான் சமர்ப்பித்த சான்றிதழ்களை ஜெயக்குமாரே மறைத்து வைத்துக் கொண்டு, தன் மீது பழி போடுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தன்னால் அரசியல் ரீதியான சர்ச்சைகள் உருவாகி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் நான், சட்டப்படிப்பை மேற்கொள்வதில் எப்படி கவனமில்லாமல் செயல்பட்டிருக்க முடியும்? பெயருக்குப் பின்னால் போதுமான பட்டங்களைப் போட்டுக் கொள்கிற அளவுக்கு, நன்கு படித்த நான், தனிப்பட்ட ஆர்வத்தினாலேயே சட்டப் படிப்பில் சேர்ந்தேன். வெறும் சான்றிதழுக்காக அல்ல.

இது குறித்த எந்த உண்மையையும் அறியாமல், தான் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தேவையில்லாமல் தன்னையும், தன் குடும்பத்தையும் அவமானப்படுத்துவது போல் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

இதன்மூலம், அவரது இத்தனை ஆண்டுகால அரசியல் அனுபவத்திற்கு அவரே இழுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மீடியாவில் தன் முகம் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லோரையும் சீண்டுவது போல் தன்னையும் ஜெயக்குமார் சீண்டியிருக்கிறார்.

தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு, எவருடைய வி‌ஷயங்களிலும் தலையிடாமல், தான் அமைதியாக தன் கடமைகளை செய்து வருவதாகவும், அம்மா ஜெயலலிதாவின் வளர்ப்பாக, பெரியோர்களை மதித்து கண்ணியம் காக்கும் பண்போடு இருப்பதாகவும், நாகரீகமற்ற விமர்சனங்களை தன்னால் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

தன் பெயரைச் சொல்லி, தன் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.