திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேவஸ்தானம் கடந்த டிசம்பர் 18 முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது.
திருமலையில் ஏற்படுத்தப்பட்ட கவுண்டர்கள் மூலம் 6 நாட்களில் 96,047 நேர ஒதுக்கீடு டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனால் பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசித்தனர்.
அதில் நிறை குறைகளை சரி செய்த பின், வரும் மார்ச் 2ஆம் வாரம் முதல் இந்த நேர ஒதுக்கீடு முறை நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
வி.ஐ.பி. பிரேக் தரிசன கட்டணம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த கட்டணத்தில் தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வி.ஐ.பி. தரிசன கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசித்து சில நாட்களில் புதிய கட்டண விபரம் அறிவிக்கப்படும்.
தரிசன டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம் உள்ளிட்ட முக்கிய சேவா டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதில் டிக்கெட் வெளியிடப்பட்டவுடன் 7 நாட்களுக்குள் பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் தற்போது அந்த காலக்கெடுவை தேவஸ்தானம் 4 நாட்களாக குறைத்துள்ளது. 4 நாட்களுக்குப் பிறகு குலுக்கல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
ஆர்ஜித சேவை டிக்கெட் நேற்று காலை முதல் 56 ஆயிரத்து 593 டிக்கெட்டுகள் விடுவிக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்து 658 டிக்கெட்டுகள் ஆன்லைன் குலுக்கல் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் ஆன்லைன் குலுக்கல் மூலம் சுப்ரபாத சேவைக்கு 7 ஆயிரத்து 878 டிக்கெட்டுகளும், தோமலா அர்ச்சனை சேவைக்கு 120 டிக்கெட்டுகளும், அஸ்டதல பாதபத்மாராதன சேவைக்கு 240 டிக்கெட்டுகளும், நிஜபத தரிசன சேவைக்கு 2 ஆயிரத்து 300 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ஜனவரி 9 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேர், மதியம் 2 மணிக்கு 2,000 பேர், மதியம் 3 மணிக்கு 1,000 பேர் என இரு நாள்களில் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் திருமலைக்கு வரும் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு ஜனவரி 10 மற்றும் 30-ந் தேதி தேவஸ்தானம் தரிசனம் வழங்க உள்ளது.
அந்நாட்களில் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சுபதம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி அலிபிரி நடைபாதை முதல் திருமலை ஏழுமலையான் கோவில் முன்பு மகாதுவாரம் வரை 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் பொருத்தும் பணி வருகிற 8-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதில் 280 கண்காணிப்பு கேமராக்கள் 4 மாட வீதிகளில் பொருத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.