ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.