சாலையில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கிய போராட்டக்காரர்கள் 
செய்திகள்

நாடு தழுவிய ஸ்டிரைக்: மேற்கு வங்கத்தில் பயங்கர வன்முறை- தீவைப்பு

மேற்கு வங்கத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டன.

மாலை மலர்

கொல்கத்தா:

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி, ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள், போலீஸ் வாகனம் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தினர். ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சில பகுதிகளில் கடைகளை திறக்க விடாமல் தடுத்தனர். அத்துடன், வேலைநிறுத்தப் போராட்டத்தை 24 மணி நேரத்திற்கு  நீட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், சாலையில் டயர்களை கொளுத்திப் போட்டனர். போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்தனர். 

மால்டா மாவட்டத்தின் சுஜாபூர் பகுதியில் வன்முறையை போலீசார் தடுக்க முயன்றபோது, அவர்களை நோக்கி கற்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்களை பயன்படுத்தியும் கூட்டத்தை கலைத்தனர். போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் மதியம் வரை 55 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.