செய்திகள்

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக விநாயகர் படம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக விநாயகர் படம் இடம் பெற்று இருந்தால் விவசாயி அதிர்ச்சியடைந்தார்.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பலகுளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப தலைவர், குடும்பத்தலைவி, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

கடவுளை குடும்பத்தில் மூத்த உறுப்பினராகவே வழிபடும் பழக்கம் ஒரு சில குடும்பத்தினருக்கு உண்டு. ஆனால் விநாயகரை குடும்ப தலைவராக்கிய சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம் (வயது 47). இவர் குடியிருக்கும் பகுதிக்கான ரேஷன் கடை சுங்காரமடக்கில் உள்ளது. இதையடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்துள்ளதை கேள்விப்பட்ட நல்லசிவத்தின் மனைவி சுமதி, சுங்காரமடக்கு ரேஷன் கடைக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டை வாங்க சென்றார்.

அப்போது கூட்டம் அலைமோதியதால் நீண்ட நேர தேடலுக்கு பிறகு இவர்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைத்தது. ஆனால் அங்கு வைத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இருப்பது தனது கணவர் நல்லசிவம்தானா? என்று சுமதி பார்க்கவில்லை.

பின்னர் வீட்டிற்கு வந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டை தனது கணவர் நல்லசிவத்திடம் கொடுத்தார். உடனே அவர் அதில் உள்ள புகைப் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் தனது புகைப்படம் அச்சிடப்படவேண்டிய இடத்தில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருந்ததே அதற்கு காரணம். ஆனால் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக இருந்தது. உடனே அந்த ரேஷன் கடைக்கு சென்று விவரம் கேட்டார். அப்போது ரேஷன் கடையில் பணியாற்றிய ஊழியர் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக இன்னொருவரின் புகைப்படம் இருந்தால் கூட ஏதாவது கவனக்குறைவால் ஏற்பட்டது என்று கூறலாம். ஆனால் குடும்ப தலைவருக்கு பதிலாக விநாயகர் படத்தை அச்சிட்டு வழங்கி இருப்பது விநோதமாக உள்ளது. எந்த வித கண்காணிப்பு, சரிபார்ப்பு, ஏதும் இல்லாமல் அவசர கோலத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுவதாக எண்ணத்தோன்றுகிறது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை சரிபார்த்த அதிகாரிகள், அதை வழங்கிய ரேஷன் கடைஊழியர் என யாரும் இதை கண்டு பிடிக்காமல் பயனாளியின் கைக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு சென்று இருக்கிறது என்றால் அதிகாரிகளின் அலட்சியமே காரணம். எனவே இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடந்த வாரம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சரோஜா என்ற பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதேபோல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலுகா மணியம்பாடி போசிநாயக் கன அள்ளி பகுதியில் மகேஷ் சின்னசாமி என்பவரது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படம் இருக்க வேண்டிய பகுதியில் செருப்பு அணிந்த கால் புகைப்படம் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.