திருவண்ணாமலை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 25-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, 3-ம் நாளான நேற்று விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், மாவட்ட இந்து முன்னணி சார்பில் அண்ணாசிலை அருகில் இருந்து மாலையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகரின் பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு அணிவகுத்து நின்றன.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சாங்கர் முன்னிலையில், ஊர்வலத்தை திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் திடீரென கூட்டத்தில் சோடாபாட்டில் ஓன்று வீசப்பட்டது. தொடர்ந்து, மேடை முன்பாக போடப்பட்டிருந்த சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்களை விரட்டியடித்தனர். மேலும், இதுபற்றி தகவலறிந்ததும், கூடுதல் எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில் அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், ஊர்வலத்துக்கு முன்பு பாதுகாப்பாக அணிவகுத்து சென்றனர்.
காமராஜார் சிலை அருகில் ஊர்வலம் வந்தபோது திடீரென ஒரு கும்பல், ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து அந்த கும்பல் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். தப்பி ஓடிய கும்பல் தெருவிளக்குகளை அணைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால், ஊர்வலத்தில் வந்தவர்கள் சிலைகளை அப்படியே போட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அதைத் தொடர்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த விநாயகர் சிலைகளை போலீசார் வேறு பாதையில் திருப்பிவிட்டு அக்னிதீர்த்தம் உட்பட பல குளங்களில் கரைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே, கும்பல் நடத்திய கல்வீச்சில் ஊர்வலத்தில் வந்த சிலர், போலீசார் என்று ஏராளமானவர்கள் காயமடைந்தனர். மோதல் நடந்த இடம் இருட்டாக இருந்ததால், தாக்குதலில் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மணலூர் பேட்டை ரோடு, தண்டராம்பட்டு ரோடு, செங்கம், ரோடு வழியாக வந்த வாகனங்கள் எல்லாம் பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டன.
பின்னர், பலத்த பாதுகாப்புடன் போலீசாரே சில விநாயகர் சிலைகள் வந்த வாகனங்களை இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை நகர் முழுவதும் நேற்று பெரும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் காணப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் உள்ள தாமரைகுளத்தில் தான் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். உர்வலம் செல்லும்போது, பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கொடுத்து அனுப்புவார்கள்.
இந்நிலையில், கோஷ்டி சண்டை, முன்விரோத தகராறு போன்றவற்றை தீர்த்துக்கொள்ள நினைக்கும் கும்பல்கள், விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு முகங்களில் வண்ண மைகளை பூசிக்கொண்டு வந்து மோதலில் ஈடுபடுவது போன்ற செயல்கள் கடந்த சில ஆண்டகளாக தொடர்கிறது.
இனி வரும் காலங்களிலாவது நகரில் வன்முறை இல்லாமல் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.