விழுப்புரம்:
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கடந்த 28-ந் தேதி 3-வது நடைமேடையில் காட்பாடிக்கு செல்ல பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு 12 மணி அளவில் அந்த ரெயிலின் 8-வது பெட்டியில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் அந்த பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ எப்படி பிடித்தது என்று மர்மமாக இருந்தது.
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய குமார்ரெட்டி, ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? மின் கசிவு காரண மாக ஏற்பட்டதா? நாச வேலையில் யாரும் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் உண்மை நிலை தெரியவில்லை.
இதையடுத்து ரெயில் பெட்டியில் தீ எப்படி பிடித்தது? என்று விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் தாஸ், திருச்சி உதவி மின்பொறியாளர் முருகன், உதவி கோட்ட மெக்கானிக்கல் அதிகாரி தனவேந்தன் ஆகியோர் இடம் பெற்றனர்.
அவர்கள் கடந்த 1-ந் தேதி விசாரணையை தொடங்கினர். ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதேபோல் நேற்று 2-வது நாளாக ரெயில்வே அதிகாரி மற்றும் 5 ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இன்று 3-வது நாளாக 2 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தனி அறையில் வைத்து விசாரணை குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
மேலும் 13 பேரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.