செய்திகள்

விழுப்புரம் அருகே போலி பெண் டாக்டர் கைது

விழுப்புரம் அருகே மருத்துவம் படிக்காமல் 7 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசண்முகம். இவரது மனைவி மஞ்சுளா (வயது 48). இவர் மருத்துவம் படிக்காமல் தனது வீட்டில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பியர்லின் மேபல்ரூபமதி தலைமையில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி முதன்மை டாக்டர் மணிமேகலை, விக்கிரவாண்டி வட்டார தலைமை மருத்துவர் ராஜ்குமார், மருந்து ஆய்வாளர் கதிரவன் உள்ளிட்டோர் ஆனத்தூர் கிராமத்துக்கு விரைந்து சென்று மஞ்சுளா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளதும், எம்.எஸ்.சி. படிப்பை படிக்க ஆரம்பித்து அந்த படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு எம்.பி.பி.எஸ். படித்ததுபோன்று போலிசான்றிதழ்களை வைத்துக்கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக தனது வீட்டில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மஞ்சுளாவை கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.