செய்திகள்

பெரியபாளையம் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை

பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் நேற்று முன்தினம் புதியதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இருளர் குடும்பங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரியும் இருளர்களுக்கு பட்டாவுடன் கூடிய மாற்று இடம் ஒதுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கயடை அறிவுச்செல்வன் தலைமையில் கிராம மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலம், ஊத்துக்கோட்டை தாசில் தார் கிருபாஉஷா ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மதுக்கடை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மதுக்கடை தற்காலிகமாக மூடப்படும் என்று தாசில்தார் கிருபாஉஷா தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.