ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது கொண்டகான் பகுதியில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் போலீசில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக செயல்படும் மாவோயிஸ்டுகள் சிலர் பழங்குடியினர் வசிக்கும் கொண்டகான் மாவட்டம் பாஸ்டர் அருகில் உள்ள பயானர் கிராமத்துக்குச் சென்றனர். அந்த கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை தடுக்காதது ஏன் என்று கேட்டு கிராம மக்களை மிரட்டினார்கள்.
பின்னர் கிராம மக்களை எல்லாம் ஒரே இடத்தில் நிற்க வைத்தனர். உங்களில் போலீசுக்கு உளவு சொல்வது யார் என்று கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது இரும்பு கம்பியாலும், தடியாலும் கொடூரமாக அடித்து தாக்கினார்கள். அதில் பலர் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தனர். இதில் ராஜு கோர்ரம், சுடு கோர்ரம் ஆகியோர் அதே இடத்தில் உயிர் இழந்தனர்.
பஞ்சாயத்து தலைவரை கடத்திச் சென்று தலையை துண்டித்து படுகொலை செய்து வீசினார்கள். பின்னர் தப்பி ஓடி விட்டனர்.
மாவோயிஸ்டுகள் தாக்கியதில் காயம் அடைந்த கிராம மக்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் கிராமங்களின் மேம்பாட்டுக்காக சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதுடன் கிராம மக்கள் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்றும் மிரட்டி வருகிறார்கள்.
3 நாட்களுக்கு முன் சாலைப்பணியில் ஈடுபட்ட காண்டிராக்டரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொன்றனர். அதற்கு முன் சாலைப்பணியில் ஈடுபட்ட கிராம மக்கள் 2 பேர் அடித்துச் கொல்லப்பட்டனர். இது போன்ற தொடர் சம்பவங்களால் அங்கு மீண்டும் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் தலை தூக்க தொடங்கியுள்ளது. #tamilnews