சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவருடன் பேரமைப்பு நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஓட்டல்கள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் வணிக பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என்றும், ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வணிகர்கள் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் எடுத்துரைத்தோம். வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும்.
மே-5 வணிகர் தின மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளையும் கொடுத்தோம். மற்ற மாநிலங்களில் விதிமீறல் கட்டிடங்களை இடிக்காமல் வரைமுறைப்படுத்தி அபராதம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் விதி மீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் கொடுத்து இருக்கிறோம். அவர் ஆவன செய்வதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது பொதுச்செயலாளர் மோகன், மண்டல தலைவர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், ஆம்பூர் கிருஷ்ணன், கடலூர் சண்முகம், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், சாமுவேல் மற்றும் எட்வர்ட் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்று இருந்தனர்.