செய்திகள்

பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் சிறந்த வீரர் விருது வென்று விகாஸ் கிரிஷண் அசத்தல்

பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷண், தங்கம் வென்றதுடன், சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். #VikasKrishan #StrandjaMemorialBoxingTournament #BulgariaBoxingtournament

மாலை மலர்

சோபியா: 

காயம் காரணமாக சில மாதங்களாக விளையாடாமல் இருந்த விகாஸ் கிரிஷண், பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதுடன், போட்டியின் சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தினார். ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69-வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. 

ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷண், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற அமெரிக்காவின் டிராய் இஸ்லேவை வென்று, தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விகாஸ் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். அத்துடன், பல்கேரியப் போட்டியின் சிறந்த வீரராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சிறப்பை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அவரைத் தவிர, அமித் பங்கல், 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் கவுரவ் சோலங்கி, 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். முகமது ஹூசாமுதீன் (56 கிலோ), சதீஷ்குமார் (91+ கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

மகளிர் பிரிவில் மேரி கோம் (48 கிலோ) மற்றும் சீமா புனியா (81+ கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். எல்.சரிதா தேவி (60 கிலோ), பாக்யபதி கச்சாரி (81 கிலோ), சவேட்டி போரா (75 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இதன்மூலம், இந்த போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றது. #VikasKrishan #StrandjaMemorialBoxingTournament #BulgariaBoxingtournament