உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபேவை போலீசார் என்கவுன்டர் செய்தனர். அவரை என்கவுன்டர் செய்ததில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பபட்டது.
இந்நிலையில் விகாஸ்துபேயின் உடல் பரிசோதனை அறிக்கையில் இறப்பதற்கு முன்பே ரத்தக்கசிவு இருந்ததாகவும், துப்பாக்கியால் தாக்கிய காயம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் உத்தர பிரதேச மாநில போலீசாருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.
போலீசார் வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேயுக்கு தெரிந்துள்ளது. இதனால் போலீசாரை கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டினான். போலீசார் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் அவர்களை ஒரு இடத்தில் தடுக்க வேண்டும் என்று ஜேசிபி-களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தான்.
போலீசார் அந்த இடத்தை அடைந்ததும், ஜேசிபி குறுக்கே நிறுத்தப்பட்டதால் வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்போது வீட்டின் மாடிகளில் தயாராக இருந்த கும்பல் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். சுதாரித்த போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
என்றாலும் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கியது.
தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான்.
விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், ஜூலை 9-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான்.
உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், ஜூலை 10-ந்தேதி பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.
கான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.