சென்னை:
அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினிகளை (லேப்டாப்) வழங்கி வருகிறது. அவ்வகையில் வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீகனக துர்கா தெலுங்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். விஜயகுமார் கலந்துகொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 57 மடிக்கணினிகள் வழங்கினார்.
விழாவில் பேசிய விஜயகுமார் எம்.பி., பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட கல்வி திட்டங்களை விளக்கினார்.
பள்ளிகளின் நிர்வாக தலைவர் பேராசிரியர் சி.எம்.கே. ரெட்டி வரவேற்புரையாற்றி, தமிழக அரசுக்கும் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். செயலாளர் என்.நரசிம்மலு, தாளாளர் டாக்டர் சி.மோகன்ரெட்டி, தலைமை ஆசிரியை சாரா சுகாசினி, உதவி தலைமை ஆசிரியர் எம்.மோகன் நாயுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.