செய்திகள்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க கூடாது: விஜயகாந்த் ஆவேசம்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க கூடாது. விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

மாலை மலர்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட மக்களை தே.மு.தி.க.வினர் நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்து ரொட்டி-பழம் வழங்கினார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்திருந்த நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நிலவேம்பு கசாயத்தை வாங்கி அருந்தினர்.


திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. டெங்கு காய்ச்சல் பலி குறித்து பொய்யான தகவல்களை அரசு கூறி வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க கூடாது. விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.