சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த், அதே வேகத்துடன் அரசியல் களத்திலும் கால் பதித்தார்.
தே.மு.தி.க.வை தொடங்கிய பின்னர் அவரது மேடைப் பேச்சுக்களும் கவனம் ஈர்த்தன. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் மேடைகளில் மணிக்கணக்கில் பேசினார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் என்றால் அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்திழுந்த அவரது பேச்சுக்கள் நாளடைவில் கிண்டலுக்குள்ளானது.
விஜயகாந்த் என்ன பேசுகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது குரல் மாறிப்போனது. அதே நேரத்தில் பேச்சாலேயே பேசப்பட்ட விஜயகாந்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டது.
அரசியல் பயணத்தில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கூறிவந்த விஜயகாந்த் பின்னர், ‘‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இது அரசியல் பாதையில் அவருக்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கனவுடன், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது கட்சிக்கு இறங்குமுகமானது. விஜயகாந்தின் உடல் நல குறைவும், கட்சிக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவும் தே.மு.தி.க. தொண்டர்களை சோர்வடைய செய்தது.
தைராய்டு மற்றும் குரல் வளை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 7-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 40 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தனது உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்தே இதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் புத்துணர்வோடு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று நாளையுடன் ஒரு மாதம் முடிகிறது. இன்னும்10 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.