விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் போலீசாரை அவதூறாக விமர்சனம் செய்து பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தே.மு.தி.க. வக்கீல்கள் ஆஜராகி 4 பேருக்கும் இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள அந்த நகலை சமர்ப்பித்து மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி சரோஜினிதேவி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.