திருவண்ணாமலை:
கடந்த 2012 ஆகஸ்ட் 28-ந் தேதி திருவண்ணாமலை காந்தி சிலை எதிரே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் தமிழக அரசையும், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிபதி மகிழேந்தி விசாரித்தார். அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல் காளிங்கன், தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், திருவண்ணாமலை கோர்ட்டில் உள்ள வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி மகிழேந்தி, சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.