செய்திகள்

அரசு கொறடா ராஜேந்திரன் நியமனத்தில் குழப்பம்: விஜயதரணி கருத்து

அரசு கொறடா ராஜேந்திரன் நியமனத்தில் குழப்பம் உள்ளதாக காங்கிரஸ் விஜயதரணி எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதும் கொறடாவை தேர்ந்தெடுப்பதும் பெரும்பான்மையான உறுப்பினர்கள்தான். முதல்-அமைச்சர் பதவி என்பதும், கொறடா பதவி என்பதும் சபாநாயகரால் அங்கீகரிக்கப்படும் பதவிகள். ஆனால் ஆளுங்கட்சியில் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தவர் முதல்- அமைச்சராகி விட்டார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கொறடாவாக இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஒருவரை மீண்டும் கொறடாவாக தேர்ந்தெடுப்பது என்பது ஏற்கனவே இருக்கும் கொறடாவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதுபோல் ஆகிவிடும்.

இவரை நாங்கள் சட்ட மன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற கடிதம் ஆளுனரிடம் செல்கிறது. அந்த அடிப்படையில் ஆளுனர் முதல்- அமைச்சரை நியமிக்கிறார். இதுதான் அரசியல் அமைப்பு சட்டத்தின் நடைமுறை.

ஆனால் கொறடாவை பொறுத்தவரை அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கடிதம் சபாநாயகரிடம் செல்ல வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இவரை கொறடாவாக தேர்ந் தெடுத்துள்ளோம் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு சபாநாயகர் அங்கீகரித்து இருந்தால் இப்போது ராஜேந்திரன் கொறடாவே கிடையாது.

சட்ட ரீதியாக அந்த கொறடா நீக்கப்பட வேண்டும். ஜெயலலிதா சபாநாயகருக்கு கொடுத்த கடிதத்தில் எங்கள் கட்சியுடைய சட்ட மன்ற கட்சியின் கொறடாவாக இவர் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற வார்த்தை இருந்திருந்தால் இவர் கொறடாவே இல்லை.

அப்படி இருந்தால் சபாநாயகர் அங்கீகரிப்பு தவறு என்று ஆகி விடும். அதை தெரிந்து தான் வெற்றிவேல் நான்தான் கொறடா, உறுப்பினர்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று கடிதம் கொடுத்திருந்தார் என்றால் அவர்களுக்கு இந்த நியமனத்தை பற்றிய கடிதம் தெரிந்துள்ளது. அதனால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மாறும்போது கொறடாவையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலும் இவர்கள் செயல்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் வருகிறது.

ஒரு சட்டமன்ற கட்சி மீண்டும் வாக்கெடுப்பை சந்திக்கும்போது மீண்டும் ஒரு கொறடா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கட்சி தலைவராக இருக்கும் பட்சத்தில் ராஜேந்திரன் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவரை அரசு கொறடாவாக ஆக்குங்கள் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

ஆனால் கட்சியின் சட்ட மன்ற கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கடிதம் பொதுச்செயலாளர் சசிகலாதான் கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இதெயெல்லாம் நடந்துள்ளதா என்று தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தது சசிகலாதான். அதே போல் கொறடாவை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற கடிதத்தை சசிகலா தான் சபாநாயகரிடம் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் சரியான நடை முறை. அதுபோல் கொடுத்ததால்தான் சபாநாயகர் அங்கீகரித்து கொறடாவாக தொடர்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஒரு வேளை சசிகலா கடிதம் கொடுக்கவில்லை என்றால் ராஜேந்திரன் கொறடாவாக தொடர வாய்ப்பே இல்லை.

அப்படி இருக்கும் பட்சத்தில்தான் வெற்றி வேல் துணை பொதுச் செயலாளரிடம் இருந்து ஒரு கடிதத்தை பெற்று என்னை சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடாவாக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.

முறையாக தேர்வு செய்யாததால்தான் கொறடா மீதான நடவடிக்கையை இவர்கள் இப்படி மாற்றிக் கொண்டு செல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டது. நீதிமன்றத்துக்கு போனால் இந்த கடிதங்கள்தான் பேசும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்பது எழுத்துப் பூர்வமான கடிதத்தில்தான் ஏற்கப்படுமே தவிர அவர்களுக்குள் ஒத்துப்போவதை நீதிமன்றம் பார்க்காது. சபாநாயகர் இந்த வி‌ஷயத்தில் சரியாக செயல் பட்டுள்ளாரா? என்பது இனிதான் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகர்கோவிலில் காங்கிரஸ் விஜயதரணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சிக்கு எதிராக மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தால் எடப்பாடி ஆட்சி தப்பித்துக் கொள்ளும்.

சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பான்மையை நிரூபித்தால் போதும் என்பதே சட்டம். அதன்படி பார்க்கும்போது, இப்போது இருக்கும் எம்.எல். ஏ.க்களில் எடப்பாடி அணிக்கே கூடுதல் எம்.எல். ஏ.க்கள் இருப்பார்கள். இதன் மூலம் அவரது ஆட்சி இப்போதைக்கு நீடிக்கும்.

ஆனால் நீண்ட நாள் ஆட்சியை நடத்த முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மற்றும் ஆர்.கே. நகர் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்திய ஆக வேண்டும்.

அந்த இடைத்தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிடும். இதில் உறுதியாக தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இப்போது தி.மு.க. கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டுவதன் மூலம் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார். அதன் பிறகே தமிழக மக்கள் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.