தஞ்சாவூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் தே.மு.தி.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொண்டர்கள் அழைத்ததின் பேரில் விஜயகாந்த்தின் மகனாக வந்துள்ளேன்.
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைதேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி தொடரும் என்று பொருளாளரே அறிவித்துள்ளார். அதன்படி அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி தொடரும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்கு சென்றிருப்பது நல்ல விஷயமாகும். மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
சந்திராயன்-2 விண்கலம் திட்டமானது தோல்வி கிடையாது. இது வெற்றிதான். ஏனென்றால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் 12 முறை விண்கலம் ஏவி அதில் தோல்வி அடைந்த பின்னர் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அதை வைத்து பார்க்கும்போது நாம் முதல் முயற்சியிலேயே 95 சதவீதம் வெற்றி அடைந்துள்ளோம். இது வெற்றிக்கான முதல்படி ஆகும். இதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.