இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் தோல்வியடைந்த இந்தியா ‘ஏ’ அணி, நேற்று ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அக்சார் பட்டேல், சாஹல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் 40.5 ஒவரில் 149 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் ரஹ்மத் ஷா 35 ரன்னும், நஜிபுல்லா ஷத்ரான் 30 ரன்னும், ஷராபுதிர் அஷ்ரபு அவுட்டாகாமல் 39 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல், விஜய் சங்கர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 30.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் கருண் நாயர் 57 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மணீஷ் பாண்டே அவுட்டாகாமல் 41 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
நாளை நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை எதிர்கொள்கிறது.