செய்திகள்

கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியா வருவீர்களா? லண்டனில் விஜய் மல்லையா பதில்

வங்கி மோசடி வழக்கில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான போது, கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட வருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். #VijayMallya

லண்டன்:

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கு மல்லையா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் அடிக்கடி கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வந்த விஜய் மல்லையாவிடம், ‘கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியாவுக்கு செல்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஆம், கர்நாடக தேர்தலில் வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. ஆனால், தற்போது நான் பிணையில் உள்ளேன். இதனால், இங்கிலாந்தை விட்டு என்னால் வெளியேற முடியாது” என அவர் கூறினார்.

இந்திய அரசியல் தொடர்பான கேள்விக்கு, “நான் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து எதுவும் அறிந்து கொள்ளவில்லை. இதனால், அது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது” என மல்லையா கூறினார். #VijayMallya

SCROLL FOR NEXT