நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது எடுத்த படம். 
செய்திகள்

நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய,விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

நாமக்கல்:

தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டி வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதால் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் பெற பெண்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அலை மோதி வருகிறது.

பழகுனர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, தகுதிச்சான்று சரிபார்ப்பு, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏராளாமான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் நேற்று மாலை 6.15 மணிக்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த மேஜை மற்றும் பீரோவுக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் தொடர்பாக அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கு முறையான கணக்கு காட்டப்படவில்லை. இதனால் போலீசார் அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இந்த நேரத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி துரைசாமி, அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தில் இருந்த இடைத்தரகரர்கள் உள்ளிட்ட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விடிய விடிய நடந்த இந்த சோதனை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தான் முடிவடைந்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சத்து 5 ஆயிரத்து 900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி துரைசாமி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரி துரைசாமி கைது செய்ய வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது. #Tamilnews