ஹனோய்:
வியட்நாமில் கொரோனா பரவலுக்கு மத்தியில் இயற்கை பேரிடர்களும் அந்நாட்டை கடுமையாக உலுக்கி வருகிறது.
அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவாங் நாம் மாகாணத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்சை தாக்கிய ‘மோலேவ்’ என்ற சக்தி வாய்ந்த புயல் அங்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி விட்டு வியட்நாம் நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் குவாங் நாம் மாகாணத்தின் டிரா வான் மற்றும் டிரா லெங் ஆகிய கிராமங்களை மோலேவ் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.
இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. ஏற்கனவே வெள்ளக்காடான சில நகரங்களில் மேலும் வெள்ளம் சூழ்ந்து அந்த நகரங்கள் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிகவும் மோசமான புயல் இது என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த புயல் அங்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கன மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து டிரா வான் மற்றும் டிரா லெங் கிராமங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
டிரா வான் கிராமத்தில் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதே போல் டிரா லெங் கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதைப்போல் இரு கிராமங்களிலும் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். ஒட்டுமொத்தமாக நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர்.