பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள விதான சவுதா கட்டிடத்திற்கு 1951ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். நிஜலிங்கப்பா முதல்வராக இருந்தபோது 1956ல் இக்கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. இக்கட்டிடம் கட்ட மொத்த செலவு அப்போது ரூ.18 கோடி மட்டுமே.
இவ்வளவு சிறப்பு மிக்க விதான சவுதா கட்டிடத்தின் வைரவிழா தற்போது கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி விதான சவுதா கட்டிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலவை மற்றும் பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக அவர் நேற்று பெங்களூருவுக்கு வந்தார்.
இந்த விழா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது-
விதான சவுதா கட்டிடத்தின் வைரவிழா ஆடம்பரம் இன்றி எளிமையாக நடைபெற வேண்டும் என்பது அரசின் விருப்பமாகும். மக்களின் வரிப்பணத்தில் எம்எல்ஏ, எம்எல்சிக்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது தேவையற்றது என்பதால் அதை தவிர்த்து சட்டப்பேரவையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனவே கூறியிருந்ததுபோல் இன்றைய கூட்டத்திற்கு பிறகு விதான சவுதா கூட்டரங்கில் சட்டப்பேரவை கடந்து வந்த பாதை என்கிற சிறப்பு குறும்படம் வெளியிடப்பட உள்ளது